Close

Collector Inspection (Covid Care Center)

Publish Date : 08/01/2022
.

.

செ.வெ.எண்:-18/2022

நாள்:07.01.2022

அரசு கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காந்திகிராம கிராமிய குடும்பநல அறக்கட்டளை அம்பாத்துறை, பள்ளபட்டி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய பகுதிகளில் அரசு கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (07.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும், மாவட்டத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்படி, பொது மக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களிலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும், தமிழக அரசால் பல்வேறு தளர்வுகளுக்கு தனிதனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து ஊராட்சிகளில் உள்ள உட்கடை கிராமங்களில் மருந்து தெளிப்பான் (Disinfection Spray) மூலம் தினசரி மருந்து தெளிக்க அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மற்றும் ஊராட்சி மன்ற கட்டங்கள் இதர அரசு கட்டங்கள் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை நுழைவு வாயில் முன் பணிக்கு வரும் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிபுரிய வேண்டும். பணியில் இருக்கும் கண்காணிப்பாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை தொழிலாளர்கள் கடைப்பிடிப்பதை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது அறிவுரை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பகுதிவாரியாக வேலை முடிந்து சென்றபின்னர் பணியிடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மை செய்தபின்னர் அடுத்த பணிக்கு வரும் தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும்.

தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரனோ நோய்த்தொற்று உறுதி செய்யும் சோதனை (Swab Test), திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, திண்டுக்கல் பேருந்து நிலையம், திண்டுக்கல் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம்(பழனி ரோடு), திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நத்தம் துறை கமலம் அரசு மேல்நிலைப் பள்ளி, சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியாhசத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோவில் மண்டபம், தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம் டயட் நிறுவனம், பழனி அரசு பாலமுருகன் தொழில்நுட்பக் கல்லூரி, பழனி ஏ.பி.ஏ. கல்லூரி, குஜிலியம்பாறை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி ஆகிய இடங்களிலும், பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் மொபைல் வாகனங்கள் (திரையிடப்பட்ட கண்ணாடி கூண்டு -Covid-19 screening kiosk) மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் கபசுர குடிநீர் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் நலனையும், அவர்களை சார்ந்த குடும்பத்தினர் நலனையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,761 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 215 தீவிர சிகிச்சை படுக்கைகள் அடங்கும். மேலும் தீவிர நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 982 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 365 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.காசிசெல்வி, துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.இரா.இரா.விஸ்வநாதன், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.சரவணன், இயக்குநர் (காந்திகிராம கிராமிய குடும்பநல அறக்கட்டளை அம்பாத்துறை) மரு.சீத்தாலட்சுமி, திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் தே.லட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்