Close

Collector Inspection – Kodaikanal

Publish Date : 09/08/2021
.

செ.வெ.எண்:-18/2021

நாள்:09.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்
ஆக்சிஜன் உற்பத்தி மைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு துரித நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையின்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு செலுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திட்டம், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ‘நாகா’ நிறுவனம் பங்களிப்புடன் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 580 லிட்டரும், ஒரு மணி நேரத்தில் 34,800 லிட்டரும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதேபோல் பிரதமர் பார்வையின் (PM Care) மூலம் NHAI–ன் மேற்பார்வையில் இரண்டாவது ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த 2 திட்டங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் 1,580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனை மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம், அதற்கு தேவையான 125 கேவிஏ திறன் கொண்ட ஜெனரேட்டர் மற்றும் இதர வசதிகள், மேலும் ரத்தம் பரிசோதனை மேற்கொள்வதற்காக இயந்திரம்(Cell Counter Machine) ஆகியவை ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து, கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா சாகச மையம் அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.