Collector Inspection – SSS mill

செ.வெ.எண்:-10/2025
நாள்:-04.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
தொழில்சாலைகளில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்சாலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(04.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பணியில் பாதுகாப்பு மற்றும் இதர நல வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சண்முகவேல் ஸ்பின்னிங் மில் தனியார் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொழிற்சாலையில் நடைபெறும் உற்பத்தி பணிகள் குறித்து, தொழிற்சாலையின் பொது மேலாளர் திரு.சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் திரு.தனபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட வேண்டிய பணிநிலைமைகள், நலன் தொடர்பான அடிப்படை வசதிகள், சம்பளம், வேலை நேரம், தங்குமிடம், மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வசதி குறித்து அங்கு பணியிலிருந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வெளிமாநில தொழிலாளர்களுக்காக பராமரிக்கப்படும் வலைதளத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் செய்வதற்கு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், பெறப்படும் புகார்களை தீர்ப்பதற்கு உள்ளக குழு(IC) அமைத்து செயல்பட்டு வருகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். விபத்து ஏற்படாத வண்ணம் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் இழப்பீடுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மற்றும் இதர தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.