Collector Inspection-Thoppampatti

செ.வெ.எண்:-50/2025
நாள்:-15.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொப்பம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் கொத்தையம் கிராமத்தில் விவசாயி திரு.சுரேஷ்பாபு என்பவர் விளைநிலத்தில் தென்னை சாகுபடியில் சுமார் 1.05 ஹெக்டர் பரப்பளவில் ரூ.26,250 மதிப்பீட்டில் ரூ.19,060 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பை ஆய்வு செய்தார். மேலும் இதே திட்டத்தின் கீழ், விவசாயி திரு.துரைசாமி என்பவர் நிலத்தில் 1.8 ஹெக்டர் பரப்பளவில் ரூ.45,000 மதிப்பீட்டில் ரூ.31,154 மானியத்தில் தென்னை பயிரில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தையம் ஊராட்சியில் ஆர்.எஸ்.பி. நகர் ஆகிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொருளூர் ஊராட்சி குப்பாய்வலசு பகுதியில் ரூ.89.92 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலும் வளர்ச்சித்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொப்பம்பட்டிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 42 சாலைப் பணிகள் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 446 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துத் திட்டப்பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.