Close

Collector Grama Sabha ( Independence Day )

Publish Date : 16/08/2019
ksc1

செ.வெ.எண்:-41/2019 நாள்:- 15.08.2019

ksc2ksc3

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், கல்வார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளராக – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டார்.

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் (15.08.2019) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், கல்வார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற, கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப. அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-

கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு, 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரைக்கவும், கிராம சபைக் கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துபணிகள், பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP), பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்தல், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழு சுகாதார தமிழகம் – முன்னோடி தமிழகம், ஜல் சக்தி இயக்கம், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-20, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொது விநிகோகத்திட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டம், குழந்தைகள் நலன் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ஏதுவாக, துறை சார்ந்த அலுவலகங்களை அணுகி, தகுதியுடைய நபர்கள் பயன்பெறலாம்.

மேலும், தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். குடிநீரின் முக்கியத்துவத்தினை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, குடிநீரினை வீணாக்காமல், தங்களது பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஉதவித்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் மூலம் சுயஉதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் கடனுதவி வழங்கப்படுகிறது.இதுபோன்று, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டும், அதனை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டும், தங்களது வாழ்வாதார முன்னேற்றிக்கொண்டு பயன்பெற வேண்டும்.

மேலும், தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்;சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முதன்மை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்