Collector meeting – World Environment Day

செ.வெ.எண்:-19/2025
நாள்:-07.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தூய்மை இயக்கம்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “தூய்மை இயக்கம்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முழுவதும் நிலையான கழிவு மேலாண்மை செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள ”தூய்மை இயக்கம்“ என்ற திட்டம் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் செயல்பாடாக ஜுன் 5, 2025 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் குப்பை சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட அளவில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களிலும் குப்பைகளை சேகரித்தல், தூய்மைப்படுத்துதல் பணி நடைபெற்றது. இதில் 6,000 கிலோ அளவிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இதேபோன்று ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் சுமார் 23,000 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை சிறப்பாக கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக் குழுவினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்தல், விதை நடவு, குப்பை அதிகம் தேங்கியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்துதல், நீர்நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தில் ”தூய்மை இயக்கம்“ செயல்பாடுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலம் நடத்தப்பட்டது. இந்த “தூய்மை இயக்கம்“ செயல்பாடு என்பது ஒருமுறை செயல்படுத்தி முடிப்பது அல்ல. தொடர் நடைமுறை செயல்பாடுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் ”தூய்மை இயக்கம்” செயல்பாடுகளில் அரசின் பல்வேறு துறைகளின் அனைத்து அலுவலகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறுவது அவசியம். நாம் பணிபுரியும் அலுவலகம் தூய்மையானதாகவும், பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிப்பதாக இருந்தால் மட்டுமே பணிபுரிவதற்கான சூழல் நன்றாக அமையும்.
அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட தேவையற்ற காகிதங்கள், கணினி பாகங்கள், மின்சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல் வேண்டும். பயன்படுத்தப்பட்டு முற்றிலும் பழுதடைந்த மர சாமான்கள், இரும்பு பீரோக்கள், நாற்காலிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
அலுவலகத்திலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளின் தன்மை அதன் மதிப்பு இவைகளை உள்ளூர் சந்தை நிலவரத்கை அடிப்படையாக கொண்டு உரிய தொழில்நுட்ப அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்களின் முகவரிகள் மூலம் தீர்மானிக்க வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் 2025 தினத்தன்று துவங்கப்பட்டுள்ள தூய்மை இயக்க செயல்பாடுகளை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர் செயல்பாடாக கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளிலும் உள்ள மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஊராட்சி நிலை அலுவலகங்கள், பயிற்சி கூடங்கள், இதர அலுவலக கட்டடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல். அரசு அலுவலகங்களில் தேவையற்ற குப்பைகளை அகற்றுவதன் மூலம் பணிபுரிவதற்கான தூய்மையான மற்றும் எளிதான பணிச் சூழலை உருவாக்க முடியும்.
நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பிற துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் விவரத்தினை தூய்மை இயக்கம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.