Close

Collector-Parappalar Dam -Collector Inspection

Publish Date : 29/06/2021
.

செ.வெ.எண்:-41/2021

நாள்:-29.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணை தூர்வாரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்
ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் தூர்வாரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.06.2021) அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன.அடி. பரப்பலாறு அணை ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 குளங்களான பெருமாள்குளம், முத்து பூபால சமுத்திரம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீராதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. மேலும் நஞ்காஞ்சியாற்றுப் படுகையில் விருப்பாட்சி முதல் ஜவ்வாதுப்பட்டி வரை உள்ள தடுப்பணை மற்றும் குடிநீர் ஆழ்துளைக்கிணறுகள் நீர் சென்றடைவதால் அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பெறுகின்றனர். பரப்பலாறு அணை தண்ணீர் விவசாய பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

பரப்பலாறு அணையின் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் தூர்வாரும் பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறையின் மூலமாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

பரப்பலாறு அணையை தூர்வாருவதன மூலம் பரப்பலாறு அணையில் கூடுதலாக 21 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். இதன்மூலம் விவசாய பாசனத்தை உறுதி செய்ய முடியும். பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற முடியும். மேலும் பாசன பரப்பு அதிகரித்து, விவசாய தொழில் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு உள்ளது.

பரப்பலாறு அணை தூர்வாரும் பணி மேல்நடவடிக்கைக்காக இன்று அணை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணைக்கு நீர்வரும் பகுதிகள், அணையில் இருந்து குளங்கள் மற்றும் பாசனத்திற்கு நீர் செல்லும் கால்வாய்கள், குடிநீர் ஆதாரங்கள், நீர்ப்பாசனம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரப்பலாறு அணையை விரைவில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.கோபி, உதவி செயற்பொறியாளர் திரு.விஜயமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,திண்டுக்கல்.