Collector-Pledge-social justice day

செ.வெ.எண்:-32/2021
நாள்:-17.09.2021
சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி எண்-110-ன் கீழ் அறிவிக்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, “சமூக நீதி நாள்” இன்று(17.09.2021) அனுசரிக்கப்பட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (17.09.2021) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.