Close

Collector – Red Cross Society – Blood Camp

Publish Date : 09/05/2022
.

செ.வெ.எண்:-15/2022

நாள்: 08.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் முகிழம் அகாடமி சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் முகிழம் அகாடமி சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திண்டுக்கல் யூனியன் கிளப் ராமகிருஷ்ணன் மீட்டிங் ஹாலில் இன்று(08.05.2022) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் முகிழம் அகாடமியின் பணிகள் மிகவும் மகத்தானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதுபோல் இங்கு நேரடியாக உயிர் கொடுக்கும் வகையில் மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது.

நமது பணிகள் எப்போதும் அடுத்தவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 3 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இது சுற்றுச்சுழலுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில், 21 நாட்களில் 605 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவு, இன்னும் எவ்வளவு குடிநீர் தேவைப்படுகிறது என்பது குறித்து துள்ளியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களை மேம்படுத்தும் வகையில், ஆழியாறு நதியை ஆதாரமாகக் கொண்டு ரூ.930 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் மற்றும் ரூ.95.5 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த 2 திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும். இதுதவிர மேலும், 2 குடிநீர் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம் குடிநீர் விநியோகத்தில் தன்னிறைவு பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மரு.கே.கே.விஜயகுமார், அரசு மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் மரு.எஸ்.ஆர்.வீரமணி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட அவைத்தலைவர் திரு.என்.எம்.பி.காஜாமைதீன், மாவட்ட துணைத்தலைவர் முனைவர் எம்.சரவணன், திண்டுக்கல் முகிழம் அகாடமி இயக்குநர் திருமதி மு.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு முகிழம் அகாடமி மாணவர்கள் 130 பேர், காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் இரத்த தானம் செய்தனர். மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது. ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பில் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், யூத் ரெட்கிராஸ் அமைப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் கல்லுாரிகளுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

.

.

காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் முனைவர் தி.தி.ரெங்கநாதன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் துணைப் பொதுமேலாளர் திரு.டி.முரளி, திண்டுக்கல் யூனியன் கிளப் செயலாளர் திரு.என்.ராமகிருஷ்ணன், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் திரு.எம்.ஏ.சையது அபுதாகீர், ரெட்கிராஸ் மாவட்ட துணை அவைத்தலைவர் அல்ஹாஜ் டாக்டர் சேக்தாவுத் மற்றும் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் திருமதி ஏ.சுசிலாமேரி, ரெட்கிராஸ் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.ஏ.ராஜகுரு, மாவட்ட ரெட்கிராஸ் செயற்குழு உறுப்பினர்கள், யூத் ரெட்கிராஸ் அலுவலர்கள், ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர்கள், கல்லுாரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.