Close

Collector – School Awareness Vehicle

Publish Date : 07/05/2022
.

செ.வெ.எண்:-10/2022

நாள்:05.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழுவினை மறு கட்டமைப்பு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனப் பயணத்தை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(05.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழுவினை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வு முதல் கட்டமாக 200 நடுநிலைப்பள்ளிகளில் 23.04.2022 அன்றும், இரண்டாவது கட்டமாக 476 அரசு தொடக்கப்பள்ளிகளில் 30.04.2022 அன்றும் நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக 475 அரசு தொடக்கப்பள்ளிகளில் 07.05.2022 அன்றும், 170 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஜுன் நான்காவது வாரத்திலும் பள்ளி மேலாண்மைக்குழுவினை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு சார்ந்து பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஏழு பிரச்சார வீடியோ வாகனங்கள் அனைத்து ஒன்றியங்களிலும் 05.05.2022 முதல் 07.05.2022 வரை நாளொன்றுக்கு 10 இடங்கள் வீதம் மொத்தம் 210 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரச்சாரத்தின்போது, பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படக்காட்சிகள் திரையிடப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.திருப்பதி, திண்டுக்கல் புறநகர் வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.