Close

Collector – Tamil Devolpment Award

Publish Date : 10/11/2020

செ.வெ.எண்:-07/2020

நாள்:07.11.2020

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளருக்கு “தமிழ்ச்செம்மல்” விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.11.2020) தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் விருது வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டு முதல் தமிழறிஞர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் மாவட்டம்தோறும் தமிழ் மீது பற்றுகொண்டு தமிழ் ஆர்வலர்கள், சங்கங்கள், அமைப்புகள் வாயிலாகவும், தனித்தும், தன்னார்வத்தோடும் தமிழ்த்தொண்டற்றி வருபவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டில் தமிழக அரசால் இவ்விருதுக்கு மாவட்டங்களிலிருந்து 37 விருதாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்களை, தமிழ்நாடு அரசு 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதாளராக அறிவித்துள்ளது. முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இலக்கிய வளமையும் மொழிபெயர்ப்பு திறனும் கொண்ட தமிழறிஞர். இவர் சித்திரைப்பூக்கள் (கவிதை நூல்), வயிரத்தின் வாள் (திறனாய்வுக்கட்டுரை) மற்றும் பசுமை நினைவுகள் (சிறுகதைகள்) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஏ.ஆர்.இராகவர்மா சிறுகதைகள், பேணுதல் சர்மா உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை, இலக்கியப் பட்டறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தால் வழங்கப்பெற்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட விருதுகள் பல பெற்றுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகங்கள், மதுரை உலகத் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள் நடத்திய விழாக்கள், கருத்தரங்குகளில் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இவரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடுஅரசு 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதாளராக இவரை அறிவித்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 03.11.2020, 04.11.2020 ஆகிய நாட்களில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்

ச்செம்மல் விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். விருதாளர் முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்கள் சென்னை சென்று விருதினைப் பெற்றுக் கொள்ள இயலாச்சூழலில், அவருக்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கான தமிழ்ச்செம்மல் விருதுடன், விருதுத்தொகையான ரூ.25,000-க்கான காசோலையும், தகுதியுரைச் சான்றிதழும் தமிழக அரசின் சார்பில் இன்று வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், விருதாளர் முனைவர் அ.சு.இளங்கோவன் அவர்களின் மனைவி திருமதி ஐ.கிருஷ்ணவேணி, சாகித்ய அகாடமி விருதாளர்(2010-ஆம் ஆண்டு குழந்தை இலக்கியம்) திரு.மா.கமலவேலன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.