Collector-Vaccination 100% villages
செ.வெ.எண்:-25/2021
நாள்:-14.09.2021
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 100 சதவீதம் செலுத்திய 15 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரசை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிட் தடுப்பூசி அனைத்து துறை அலுவலர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசால் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்த அறிவுறுத்தப்பட்டதில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் அடுக்கம், காமனூர், கிழக்குச்செட்டியபட்டி, கும்பறையூர், பாச்சலூர், பெரியூர், பூலத்தூர், தாண்டிக்குடி, பூண்டி ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் குத்திலுப்பை, வாலையபட்டி ஊராட்சிகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி, வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் சிங்காரகோட்டை ஊராட்சி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மாபட்டி ஊராட்சி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணலூர் ஊராட்சி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 15 கிராம ஊராட்சிகள் 100 சதவீதம் இலக்கினை எய்துள்ளது.
இப்பணிகளை விரைந்து முடித்த 15 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோரை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.09.2021) பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
மேலும், இப்பணிகளில் ஈடுபட்ட அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதார துறை பணியாளர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி சி.பிரியங்கா, இ.ஆ.ப., உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜ் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.