Close

Collector VC with School Students

Publish Date : 01/03/2025
.

செ.வெ.எண்:-82/2025

நாள்:-26.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,817 மாணவ, மாணவிகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (26.02.2025) கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, பேசியதாவது:-

12-ஆம் வகுப்பினை நிறைவு செய்யும் உங்களை சமூக‌ பொறுப்புள்ள ஒரு குடிமகன் என்ற அடையாளத்துடன் இச்சமூகம் உங்களை இனி பார்க்கும். நான் அரசுப் பள்ளி மாணவன், தற்சமயம் மாவட்ட ஆட்சியராக உள்ளேன். எனது பெற்றோர் இன்றும் ஈரோடு மாவட்டத்தில் கிராமத்தில் வேலை செய்கின்றனர். இருப்பினும், நான் கற்ற கல்வியானது என்னை உயர்ந்த நிலைக்கு மாற்றியதைப்போல, நீங்கள் கற்கும் கல்வி உங்களை உயர்த்தும். ஒரு தலைமுறையையே மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. 2005-ல் என் பள்ளிப்படிப்பை முடித்தேன். அடுத்த 20 ஆண்டுகளில் அக்கல்வி என்னை மாவட்ட ஆட்சியராக உயர்த்தியுள்ளது. கல்வி மீது கவனத்தை குவிக்க வேண்டிய காலத்தில், கல்வி மீதே உங்கள் முழு கவனமும் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் பற்றி கவலை கொள்ள வேண்டாம், ஆனால், கற்பதற்கு தயங்க கூடாது. ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” எனும் குறளுக்கு ஏற்ப உங்கள் சிந்தையில் நல்மாற்றம் அவசியம். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் நான்கு முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் படிக்க வேண்டும். உடல் நலனில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கோடைகாலம் துவங்க உள்ளதால் காய்ச்சல், அம்மை உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை போதிய அளவு எடுத்துக்கொள்வதோடு, சுகாதாரமான குடிநீரும் பருக வேண்டும். இரவு நெடுநேரம் விழுத்திருந்து படிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பாடங்களுக்கு ஆசிரியர் உதவியுடன் சிறப்புப் பயிற்சிகளும், திருப்புதலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, அனைவரும் பொதுத்தேர்வு அன்று விடுப்பு ஏதும் எடுக்காமல், பொதுத்தேர்வு வாய்ப்பை நழுவ விடாமல் அவசியம் பங்கேற்க வேண்டும். இதன் பொருட்டு பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர்களும் எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். தேவையான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்குவர்.

மூன்றாவதாக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப்புதல்வன்’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வாய்ப்பை பிரகாசிக்கச் செய்துள்ளன. இத்திட்டங்களின் முழு பலனையும் மாணவ, மாணவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்பது குறித்தான கவலை ஏதும் வேண்டாம். மாவட்ட நிர்வாகம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரும் உயர் கல்வி பெறுவதை உறுதி செய்வதே மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணியாகும்.

நான்காவதாக, மாணவ/மாணவியர் பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் விடுப்பில் இருப்பின் ஆசிரியர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

கலந்துரையாடலின்போது, மாணவ, மாணவிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுது எப்படி, தேர்வு பயத்தை போக்கும் வழிமுறைகள், ஜே.இ.இ., நீட்(NEET) உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகள், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுவது, சி.ஏ., படித்தல், ஐடி துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.

நிறைவாக, மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவ/மாணவியரிடம் தினசரி செய்தித்தாள் வாசிப்பதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும், பொதுத்தேர்வை அனைவரும் எழுதுவோம் என்ற உறுதிமொழியினை எடுக்கச் செய்து, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வாழ்த்து கடிதம் (தபால் அட்டை) நேரடியாக வழங்கப்பட்டது. அந்த வாழ்த்து கடிதத்தில், ”எனதன்பார்ந்த மாணவ / மாணவிகளே, வணக்கம். 12 ஆண்டுகாலப் பயனை அடைய நீ எழுதப்போகும் பொதுத்தேர்வு இது. தன்னம்பிக்கையுடனும், தெளிவுடனும் இத்தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெறவும், தொடர்ந்து உயர் கல்வி பெற்று நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தேர்வு உந்தன் வாழ்க்கையின் ஒரு பகுதியே ! முடியாது என எதையும் விட்டு விடாதே ! முயன்றுபார் நிச்சயம் உன்னால் முடியும்!” என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.