Close

Consumer Protection Day

Publish Date : 19/04/2022
.

செ.வெ.எண்:-49/2022

நாள்:19.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் பேகம்பூர் மான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(19.04.2022) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகரவோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா ஆகியவற்றை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

இந்திய அரசியமைப்புச் சட்டம் 1986-ஆம் ஆண்டு 24-ஆம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவு கூர்வதற்காவே ஆண்டுதோறும் உலக நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வருவதற்கு முன்னர் பொருட்களை விற்பவர்களுக்கு எவ்வித கடமையும், பொறுப்பும் இல்லை என்பது சட்டம். வாங்கும் நாமே பொருட்களை பார்த்து வாங்கிட வேண்டும். விற்பனையாளரிடம் எந்தவித நிவாரணமும் கோர முடியாது என்ற நிலை இருந்தது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் விற்பவரின் கடமைதான் அனைத்தும் என்றும், வாங்குபவருக்கு அதில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கவும், நிவாரணம் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்கள் அல்லது சேவைகளை கட்டணம் செலுத்தியோ அல்லது ஒப்புக்கொண்டோ அதை பயன்படுத்துபவர்கள் நுகர்வோர் ஆவர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நுகர்வோருக்கு 8 வகையான உரிமைகளை வழங்கியுள்ளது. பாதுகாப்பு, தகவல் பெறுதல், தேர்வு செய்யும் உரிமை, பிரதிநித்துவத்திற்கான உரிமை, குறைதீர்த்துக்கொள்வதற்கான உரிமை, நுகர்வோர் கல்வி, சுகாதாரமான சுற்றுச்சூழல், அடிப்படைத தேவைகளுக்கான உரிமைகளை வழங்குகிறது.மக்கள் விழிப்புணர்வுடன் பொருட்களின் தரம், எடை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை தெரிந்து அறிந்து வாங்கிட வேண்டும். தரமற்ற, எடைக்குறைந்த மற்றும் போலியான பொருட்களை வாங்குவதையும், போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து தரமற்ற பொருட்களை வாங்குவதை நுகர்வோர் ஆகிய பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். போலி விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல், தெளிவான சிந்தனையுடனும், எச்சரிக்கையுடனும், தரமுத்திரையினை பார்த்து பொருட்களை வாங்கிட வேண்டும். எந்தவித தகவலும் அச்சிடப்படாத பொட்டல பொருட்களை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். விலை அதிகமாக இருந்தால் அது தரமான பொருட்கள் என்றும், விலை குறைவாக இருந்தால் தரமற்ற பொருட்கள் என்ற தவறான எண்ணத்தினை மாற்றிட வேண்டும்.

.

.

விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு கூடுதலான மருந்து, உரத்தினை பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெறலாம் என்ற தவறான எண்ணத்தினை தவிர்த்து தேவையான அளவில் வேதிப்பொருட்களை பயன்படுத்தினால் பலவித நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம். பழங்கள் வாங்கும்போது, மெழுகு பூச்சு இல்லாத, ரசாயனம் கலக்காத பழங்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும். உடல் ஆரோக்கியத்தினை கருத்தில்கொண்டு நம் முன்னோர்கள் பல்வேறு வகையான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தனர். அந்தவகையில் நாமும் நமது பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்ந்திடலாம்.நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சமையல் பொருட்கள், பால்பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது தயாரிப்பின் காலம், காலாவதி நாள், எடை அளவு, ISI முத்திரை, நிர்ணயிக்கப்பட்ட விலை இவற்றுடன் உரிய ரசீதினை கேட்டுப்பெற வேண்டியது அவசியமாகும். நுகர்வோருக்கு வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடு இருந்தால் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக்குழு, மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றம், மாநில நுகர்வோர் குறைத்தீர்க்கும் ஆணையம், தேசிய நுகர்வோர் குறைத்தீர்க்கும் ஆணையங்களில் ஏதாவது ஒன்றில் புகார் தெரிவிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் கூட போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை முற்றிலுமாக மாற்றும் வகையில் ஒவ்வொருவருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாகும். எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

முன்னதாக கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.எஸ்.சரவணன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் திரு.சுப.சுப்பிரமணியம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தனி வட்டாட்சியர்(பறக்கும் படை) திரு.அபுரிஸ்வான், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அசோசியேசன் தலைவர் திரு.சுரேஷ், மான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.