Corona – awareness week Day-1

செ.வெ.எண்:-01/2021
நாள்:01.08.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(01.08.2021) தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்கள், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். “கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதனை நான் அறிவேன். அதனை தவிர்க்க, பொது இடங்களுக்குச் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன். மற்றவர்களிடமிருந்து குறைந்த பட்சம் 6 அடி இடைவெளியை கடைப்பிடிப்பேன். சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன். நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவேன். இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நான் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பேன். மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவேன். கொரோனா மூன்றாம் அலையினை தடுக்க எப்பொழுதும் விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஒட்டி, பயணிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு முழு வீச்சிலி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் இருக்க பொதுமக்களிடையே பல்வேறு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களிடையே கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒரு வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள் அருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா பரவலை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய கொரோனா விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், துணை இயக்குனர்;கள் (சுகாதாரப் பணிகள்) மரு.வி.நளினி, மரு.கே.ஆர்.ஜெயந்தி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.