Close

Corona – awareness week Day-3

Publish Date : 04/08/2021
.

செ.வெ.எண்:-05/2021

நாள்:03.08.2021

கொரோனா தடுப்பு வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தின் 3-வது நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில், கொரோனா தடுப்பு வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் வர்த்தகர்கள் சங்க கூட்டரங்கில் இன்று(03.08.2021) நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் இருக்க பொதுமக்களிடையே பல்வேறு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒரு வாரம் மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தொழிற்சாலை நுழைவு வாயில் முன் பணிக்கு வரும் தொழிலாளர்களின் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிபுரிய வேண்டும். பணியில் இருக்கும் கண்காணிப்பாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை தொழிலாளர்கள் கடைப்பிடிப்பதை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது அறிவுரை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பகுதிவாரியாக வேலை முடிந்து சென்றபின்னர் பணியிடங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மை செய்தபின்னர் அடுத்த பணிக்கு வரும் தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும்.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள், சந்தை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா பரவலை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோ.பூங்கோதை, நகர்நல அலுவலர் மரு.லட்சியவர்ணா, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.