Close

Corona Prevention Programme

Publish Date : 20/03/2020
corono-1

corono-3 corono-2 corono-4 corono-1செ.வெ.எண்:-22ஃ2020 நாள்:19.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
————————————————————————————————————————————-
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.03.2020) திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கி தெரிவித்ததாவது:-

கொரோனா தடுப்பு முறை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தொடர்ந்து சீரிய முறையில் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளுக்கு 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்;பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கிருமிநாசினி தெளித்து, பொதுமக்கள் கைகள் படும் இடங்களை சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைகளை முறையாகவும், சுத்தமாகவும் கழுவும் விதம் குறித்து பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்து துறை அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு கிருமிகள் பரவுவதை தடுக்கும் வகையில் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

(2)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் கோட்டத்தில் 881 பேருந்துகள் உள்ளன. இதில் 800 பேருந்துகள் தினந்தோறும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன். திண்டுக்கல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 470 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கொரோனா வைரஸ் நோய் கிருமிகள் அண்டை மாநிலங்களில் இருந்து பரவுவதை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துப் பணிமனைகள் 8 இடங்களில் உள்ளன. இங்கு 3,200க்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். அனைத்து பணிமனைகளிலும் கிருமிநாசினி மருந்து தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்களிடையேயும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மார்க்கெட் பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களிடம் கொரானோ தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும், மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் கொரோனா பரவாமல் முழுமையாக தடுக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்;.

இந்த ஆய்வின்போது, போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் திரு.என்.கணேசன், நகர்நல அலுவலர் மரு.அனிதா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-