Counting centers – Collector inspection

செ.வெ.எண்:-31/2022
நாள்:15.02.2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 11 வாக்கு எண்ணுகை மையங்கள் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணுகை மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் இன்று(15.02.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பிள்ளையார்நத்தம் அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிள்ளையார்நத்தம் அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேடசந்தூர்(வடமதுரை சாலை) பிவிஎம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும், பாளையம், எரியோடு பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குஜிலியம்பாறை ஆலம்பாடி ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியிலும், வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குளத்தூர் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நத்தம் துரைகமலம் மேல்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 11 வாக்கு எண்ணுகை மையங்கள் இறுதி செய்யப்பட்டு, வாக்கு எண்ணுகை பணியானது அந்தந்த வாக்கு எண்ணுகை மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு துவக்கப்படவுள்ளது.
இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 183 வாக்குச்சாவடிகளுக்கு 14 வாக்கு எண்ணுகை மேஜைகள் வீதம் 14 சுற்றுகளாகவும், கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வாக்குச்சாவடிகளுக்கு 7 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 6 சுற்றுகளாகவும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 71 வாக்குச்சாவடிகளுக்கு 5 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 15 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது.
மேலும், மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 பேரூராட்சிகளில் உள்ள 421 வாக்குச்சாவடிகளுக்கு 66 வாக்கு எண்ணும் மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியானது குறைந்தபட்சம் 4 சுற்றுகளாகவும், அதிக பட்சம் 9 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது.
தேர்தல் நாளான 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தகுந்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்புடன், பாதுகாக்கப்பட்ட அறையில்(Strong room) வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.வீ.பழனிக்குமார், கேபிள் டிவி வட்டாட்சியர் திரு.கோ.சுப்பிரமணியபிரசாத் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.