Close

Covid 19 – precautionary measures

Publish Date : 06/01/2022

செ.வெ.எண்:-12/2022

நாள்:-06.01.2022

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 2,761 படுக்கைகள், 982 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 365 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் தொற்று காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தினசரி சராசரியாக ஐந்து முதல் எட்டு நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு,

  • பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும்.
  • அவசியமின்றி அடிக்கடி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
  • பொது இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் தீவிர நோய் மற்றும் இறப்பு குறைவாக உள்ளதால், அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 04-01-2022-ஆம் தேதி வரை, 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 16,72,129 (91.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 11,54,638 (63.1 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,761 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 215 தீவிர சிகிச்சை படுக்கைகள் அடங்கும். மேலும் தீவிர நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 982 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 365 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.