Close

Covid 19- Relief fund-Disaster Management

Publish Date : 03/01/2022

செ.வெ.எண்:03/2022

நாள்:03.01.2022

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசின் இழப்பீடு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 999 நபர்கள் இணையவழியாக விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 797 கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 297 விண்ணப்பங்கள் சிறப்பு குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் என முடிவு செய்து தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 விண்ணப்பங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்த இனங்கள் என கண்டறியப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் 28 விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்டரீதியான பிரச்சனை காரணமாக தொகை வழங்கப்பட இயலாத நிலை உள்ளது.

மேலும், இதில் 71 விண்ணப்பங்கள் முகவரி முழுமையாக இல்லாத காரணத்தினாலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலையிலும் உள்ளது. மேலும் எஞ்சிய விண்ணப்பங்கள் மருத்துவ ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை. இவை குறித்து மருத்துவ ஆவணம் சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நபர்கள் குறித்த விவரங்கள் https://dindigul.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இனங்களில் தகுதியான நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்று போன்ற முழுமையான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடனடியாக தாக்கல் செய்து மேற்படி ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவியினை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.