Covid-19 vaccination mega camp
செ.வெ.எண்:-19/2021
நாள்:08.10.2021
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 10.10.2021 அன்று 1,059 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் மாபெரும் தடுப்பூசி முகாம் வாரந்தோறும் நடைப்பெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.10.2021) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17,30,600 பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 11,33,043. இது 65.5 சதவீதம் ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 3,16,540. இது 18.3 சதவீதம் ஆகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் முறையாக 12.09.2021 அன்று நடைபெற்ற 1,225 முகாம்களில் 72,459 நபர்களுக்கும், இரண்டாவது முறையாக 19.09.2021 அன்று நடைபெற்ற 359 முகாம்களில் 30,124 நபர்களுக்கும், மூன்றாவது முறையாக 26.09.2021 அன்று நடைபெற்ற 1,010 முகாம்களில் 81,287 நபர்களுக்கும், நான்காவது முறையாக 03.10.2021 அன்று நடைபெற்ற 898 முகாம்களில் 50,649 நபர்களுக்கும் என மொத்தம் 3,492 முகாம்களில் 2,34,519 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 5,97,557. இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 92,872.
திண்டுக்கல் சுகாதார வட்டத்தில் 50,110 கொரோனா தடுப்பூசிகள், பழனி சுகாதார வட்டத்தில் 41,460 கொரோனா தடுப்பூசிகள் என மொத்தம் 91,570 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சாராசரியாக கடந்த ஜுன் மாதம் 154 நபர்கள், செப்டம்பர் மாதம் 11 நபர்கள் என்ற எண்ணிக்கையில் உள்ளது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 8 நபர்கள் ஆகும். மேலும் பிராணவாயு சிகிச்சை தேவைப்பட்டவர்கள் 54 நபர்கள். பிராணவாயு சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 39 நபர்கள் ஆகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளில் இதுவரை 52.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வயது முதிர்;ந்தவர்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு மூலம் வீடுகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்களப் பணியாளர்களில் இதுவரை 99.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை செலுத்தாமல் விடுபட்டவர்களுக்கு அவர்களது துறைகள் மூலம் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 9.10.2021 மற்றும் 10.10.2021 ஆகிய நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்ளும் அனைவருக்கும் பிஸ்கட் வழங்கப்படவுள்ளது. 9.10.2021 மற்றும் 10.10.2021 ஆகிய நாட்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக தங்க நாணயங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் கூப்பன்கள் ஆகியவை ஊராட்சியின் மூலமாகவும், என்ஜிஓ-க்கள் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், ஆட்டோக்கள் மூலம் மைக்செட் வைத்து பிரச்சாரம் செய்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 10.10.2021 அன்று 1,059 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இம்முகாம்களை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.