Cultural Propaganda Discourse

செ.வெ.எண்:-47/2023
நாள்: 23.02.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கலில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு இன்று(23.02.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்று சிறப்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இளைய சமுதாயத்தினரை சிறந்த முறையில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக்கிட மாண்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். கடந்த காலங்களில் இருந்ததை காட்டிலும் தற்போது படித்த இளைய சமுதாயத்தினருக்கு போட்டிகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது. எனவே படிப்புடன் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. உயர் கல்வி பயிலவும் வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் உயர் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவிகளாகிய நீங்கள் சிறந்த சக்தி மிக்க செயல்பாடுகளைக் கொண்டு இருக்க வேண்டும் உங்களது திறமையை பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது தொன்மையான பாரம்பரியம் தொன்மையான நாகரீகம், கலாச்சாரங்களை அறிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களில் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
திருக்குறளில் நமக்குத் தேவையான அத்தனை விபரங்களும் உள்ளது. செழிப்பான கருத்துக்களைக் கொண்ட புத்தகம் படிப்பது நமது அறிவு மற்றும் ஆளுமையை அதிகரிக்கும். கல்லூரி மாணவ மாணவிகளாக நீங்கள் தமிழோடு பயணிப்பது தொடர்பாக இந்த சொற்பொழிவுகள் உங்களுக்கு உந்துதலை தரும், நாம் அனைவரும் சாதாரணமானவர்கள் தான் நமது உழைப்பு, செயல், முயற்சி ஆகியவை தான் நம்மை உயர்வாக்கி கொள்ள முடியும், விடாது முயற்சி செய்யும் அனைவரும் சாதனையாளர்களாக ஆக முடியும், டாக்டர் கலைஞர் அவர்களின் காலத்தில் 33 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரப்பட்டது, இன்று அரசுத் துறையில் அதிக அளவிலான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு உயர்கல்வியை உறுதிப்படுத்தும் விதத்தில் புதுமைப்பெண் திட்டம் நமது முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்டு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் பெண்களின் உயர் கல்வி அதிகரித்துள்ளது,
அதிக தனியார் நிறுவனங்களில் முதன்மை செயல் அதிகாரியாக அதிக தமிழர்கள் இன்று உள்ள நிலையை காண முடிகிறது. உங்களால் முடியும் என முயன்றால் முடியாதது எதுவுமில்லை. அரசின் பல திட்டங்களை அறிந்து அவைகளை பயன்படுத்தி நீங்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைய வேண்டும் என பேசினார்
இந்நிகழ்ச்சியில், தொட்டுதொடரும் நம்ம நவீன இலக்கிய மரபு என்ற தலைப்பின் எழுத்தாளர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் மற்றும் தமிழர் வாழ்வு புனைவுகள் வழியே என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி ஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சரவணன், தமிழ் இணைய கல்வி கழக ஆய்வு வளமையியர் திரு.காந்திராஜன், திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சோ.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.