Close

DBCMBC – Minority Commission – President

Publish Date : 01/03/2025
.

செ.வெ.எண்:-80/2025

நாள்:-26.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் தலைமையில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று(26.02.2025) நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் செயலர் திரு.வா.சம்பத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும், தமிழ்நாடு மாநில் சிறுபான்மையினர் ஆணையக் குழுவினர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, உரிமைகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு சிறுபான்மையின மக்களுக்காக அவர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையின மக்களின் கருத்துக்களை கேட்டு, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மையினர் கல்வி நிலைய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன் வசிக்கின்றனரா, மத நல்லிணக்கத்துடன் வசிக்கின்றனரா என்பது குறித்து 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 11 மாவட்டங்களில் ஆய்வை முடித்து, இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மதச்சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த குறிப்பாக கிறித்துவர்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள் போன்ற சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமூகத்தில் இருக்கின்ற வாழ்வியல் பிரச்சனைகள், நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் 489 கோரிக்கை மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஆணை உறுப்பினர்கள், அரசு அலுவலர்களின் ஆலோசனையின்படடி நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டதன்பேரில், 151 சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசிகர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அடையாள அட்டைகளை 22 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்கள் திரு.நாகூர்.எ.எச்.நஜ்முதீன், திரு.பிரவீன்குமார் டாடியா, திரு.ராஜேந்திர பிரசாத், திரு.எம்.ரமீட் கபூர், திரு.ஜெ.முகமது ரபி, திரு.எஸ்.வசந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.அரா.சக்திவேல், உதவி ஆணையாளர்(கலால்) திரு.பால்பாண்டி, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.