DDAWO-Award
செ.வெ.எண்:-74/2025
நாள்:20.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் 15.08.2025 சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் (மாவட்டஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்), மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் ரூ.5,000- ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டு. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.06.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.