DDAWO – sirumalai – schemes

செ.வெ.எண்:-28/2023
நாள்:-20.04.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 19,950 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஏற்பாட்டில் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் நலத்திட்டங்கள், சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் 40,109 அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.1,500 பெற்று பயனடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதற்கிணங்க மாதம் ரூ.500 வீதம் உயர்த்தப்பட்டு, ஜனவரி-2022 மாதம் முதல் ரூ.2,000 மாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 12,000-க்கு மேல் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு உதவிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்கி, பொருளாதார ரீதியாக முன்னேற்றும் வகையில் மாவட்ட அளவில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடமை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2021-22 ஆண்டில் 787 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.84 கோடி கடன் வழங்கப்பட்டது. அதில், ஆடு, மாடு வளர்ப்பதற்காக 370 நபர்களுக்கு ரூ.98.52 இலட்சம், பெட்டிக்கடை வைப்பதற்கு 168 நபர்களுக்கு ரூ.67.20 இலட்சம், சிறு தொழில் (இட்லி கடை, பூக்கடை, எலக்ட்ரீசியன், பலூன் விற்பனை போன்ற தொழில்கள்) செய்வதற்காக 158 நபர்களுக்கு ரூ.73.10 இலட்சம் மற்றும் தையல் தொழில் புரிவதற்கு 91 நபர்களுக்கு ரூ.45.50 இலட்சம் வழங்கப்பட்டது.
2022-23 ஆண்டில் 699 மாற்று திறனாளிகளுக்கு ரூ 300.05 இலட்சம் கடன் வழங்கப்பட்டது. அதில். ஆடு, மாடு வளர்ப்பதற்காக 372 நபர்களுக்கு ரூ.1.62 கோடி, பெட்டிக்கடை வைப்பதற்கு 178 நபர்களுக்கு ரூ.68.01 இலட்சம், சிறு தொழில் (பழக்கடை, பால்வியாபாரம், அயன் வண்டி போன்ற தொழில்களுக்கு) செய்வதற்காக 114 நபர்களுக்கு ரூ.56.14 இலட்சம் மற்றும் தையல் தொழில் புரிவதற்கு 35 நபர்களுக்கு ரூ.13.50 இலட்சம் வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு குறியீட்டை விட அதிகளவில் கடனுதவி வழங்கியதற்காக திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2023-24 ஆண்டில் ஏப்ரல் 20 வரை 71 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.50 இலட்சம் கடன் வழங்கப்பட்டது. அதில். ஆடு, மாடு வளர்ப்பதற்காக 43 நபர்களுக்கு ரூ.21.50 இலட்சம், பெட்டிக்கடை வைப்பதற்கு 11 நபர்களுக்கு ரூ.5.50 இலட்சம், சிறு தொழில் (பழக்கடை, பால் வியாபாரம், அயன் வண்டி போன்ற தொழில்கள்) செய்வதற்காக 8 நபர்களுக்கு ரூ.4.00 இலட்சமும் மற்றும் தையல் தொழில் புரிவதற்கு 9 நபர்களுக்கு ரூ.4.50 இலட்சம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2021-2022ம் நிதியாண்டில்,
1320 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள்.
4359 பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள்.
7014 பயனாளிகளுக்கு ரூ.12.60 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை.
730 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ. 21.47 இலட்சம்.
சிறப்பு பள்ளிகள், இல்லங்கள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ. 1.02 கோடி.
71 பயனாளிகளுக்கு ரூ.55.98 இலட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்.
224 பயனாளிகளுக்கு ரூ.26.88 இலட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போன்.
14 ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 894 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 9680 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022-2023ம் நிதியாண்டில்,
1418 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள்.
2338 பயனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள்.
7613 பயனாளிகளுக்கு ரூ.17.24 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை.
664 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.18.05 இலட்சம்.
சிறப்பு பள்ளிகள், இல்லங்கள் ஊதிய மான்யம் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.82.43 இலட்சம்.
104 பயனாளிகளுக்கு ரூ.82.00 இலட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்.
470 பயனாளிகளுக்கு ரூ.64.16 இலட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போன்.
15 தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 739 மனுக்கள் பெறப்பட்டு, ஏனைய மனுக்களின் மீது நடவடிக்கை.
ஆக மொத்தம் 10020 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.91 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 19,950 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஒருநாள் இன்ப சுற்றுலாவாக, சிறுமலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சிறுமலைக்கு சுற்றுலாவாக வந்த மாற்றுத்திறனாளிகள் அங்குள்ள பல்லுயிர் பூங்காவை கண்டு ரசித்தும், செயற்கை அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். சிறுமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை அருவியானது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் எளிதில் சென்று செயற்கை அருவில் குளிக்கும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் திரு.பகத்சிங் மற்றும் திருமதி ஜெயந்தி ஆகியோர் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் சம்பந்தமாக கடன் உதவிகளை வழங்கி வருகிறார். தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுபேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த இன்ப சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளனர். பல்லுயிர் பூங்கா, செயற்கை அருவி, சிறுமலையை சுற்றி பார்த்தோம். செயற்கை அருவியில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சாய்வு தளம் அமைத்து இருப்பதால் இலகுவாக வந்து போகும் அளவிற்கு உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையில், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த இன்ப சுற்றுலா இருந்தது. இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.