Close

DDAWO- Special Grievance Day Petition

Publish Date : 20/09/2024
.

செ.வெ.எண்:-50/2023

நாள்:-19.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் கடன் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில், மாதாந்திர உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பெட்ரோல் ஸ்கூட்டர், பசுமை வீடு மற்றும் வங்கிக்கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 110 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,000 மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலிகள் ரூ.27,000 மதிப்பீட்டிலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.10,000 மதிப்பிலான தையல் இயந்திரம், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.500 மதிப்பிலான ஊன்றுகோல் ரூ.3,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான மாதம் ரூ.1,500-ஐ உயர்த்தி ரூ.2000 வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதையடுத்து, மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை(UDID), மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் உதவித்தொகை, சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவிகள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் மற்றும் உபகரணங்கள், முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூளை முடக்குவாத சிறப்புச் சக்கர நாற்காலி, மூன்று சக்கரவண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபயிலும் வண்டி, ஊன்றுகோல் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி, அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அறிந்து அவற்றை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.