District Employment Office தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்(OMCL)
செ.வெ.எண்:-36/2021
நாள்:20.09.2021
தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு நிறுவனம் (OMCL) வாயிலாக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) என்பது 1978-ம் ஆண்டு இந்திய தொழிற்சாலை விதி 1956-ன்படி துவங்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10,350-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சௌதி, அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர், பாராமெடிக்கல்-டெக்னிசியன்கள், திறன் சார்ந்த மற்றும் திறன் அல்லாத பணிக்காலியிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள் அதிகப்படியான திறன்படைத்த இளைஞர்களை உருவாக்குதல், இளைஞர்களை அயல்நாடுகளில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படித்தல், கவனித்தல் போன்ற திறன்களை வேலைநாடும் இளைஞர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு வருடமும் 500 செவிலியர்களுக்கு தொழில் தொடர்பான ஆங்கில தேர்வு முறை (Occupational English Test) பற்றிய பயிற்சி வழங்குதல், தேர்வு செய்யக்கூடிய செவிலியர்களுக்கு வருடத்திற்கு சுமார் 18 லட்சம் வரை ஊதியம் பெற்றுத்தர வழிவகை செய்தல் போன்றவை ஆகும்.
மேலும் அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறமுடியும். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் (OMCL) வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதோடு இல்லாமல் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு இந்நிறுவனம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பதிவுசெய்யும் முறை பற்றிய விளக்கங்களை பற்றிய முழுமையான விவரங்களை வழங்குகிறது. மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களை திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (தொலைபேசி எண்.0451-2461448) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
எனவே அயல் நாடுகளில் வேலை தேடும் இளைஞர்கள் மேற்காணும் இணையதளத்தில் பதிவு செய்து இந்நிறுவனம் வாயிலாக அறிவிக்கக் கூடிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.