Close

DEO-Private employment Camp

Publish Date : 18/03/2022

செ.வெ.எண்:-32/2022

நாள்:17.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்பு துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் – 2022 மாதத்தில் 18.03.2022 மற்றும் 25.03.2022 ஆகிய நாட்களில் காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலைபேசி எண்.9499055924 வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும். மேலும், இம்முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் பதிவுதாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.