DIC – Global Investors Meet – 2024
செ.வெ.எண்:16/2023
நாள்:-05.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு ஜனவரி 7 மற்றும் 8, 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து, நடைமுறைப்படுத்த அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லுரி கூட்டமைப்பு, அனைத்து அரசு நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறைகளை மாவட்ட நிரிவாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி ரூ.90 லட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 குறித்து அனைத்து விவரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள “மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, எஸ்.ஆர். மில்ஸ் ரோடு, திண்டுக்கல்“ அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலைபேசி எண்(8925533943) வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.