Close

DIC – Needs scheme

Publish Date : 10/03/2023

செ.வெ.எண்:-59/2023

நாள்:-27.02.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீட்ஸ் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசால் ”புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (நீட்ஸ்) மாவட்ட தொழில் மையம் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தொழில் துவங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற பொதுப் பிரிவினர் 21 முதல் 35 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் துவங்க ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயண வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் கொள்முதல் செய்திட இத்திட்டத்தில் விண்ணப்பித்து மானியத்துடன் கூடிய தொழிற்கடன் உதவி பெறலாம். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் https://www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடையவர்கள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.