Dindigul Corporation water schemes – Inspection
செ.வெ.எண்:-42/2023
நாள்: 16.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் அத்திட்டத்தின் புனரமைப்பு பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் அத்திட்டத்தின் புனரமைப்பு பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ச.இராஜப்பா மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கி வைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது உள்ள மக்கள் தொகையின் தேவைக்கேற்ப போதுமான அளவ குடிநீர் வழங்கவும், எதிர்காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப குடிநீர் தேவையை சமாளிக்கவும், நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கள் மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள 636 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் காவிரி ஆற்றில் அமைந்துள்ள புதுப்பாளையம் நீர் சேகரிப்பு கிணறு, ஆழ்துளை கிணறுகள் மற்றும் ரெங்கநாதன் பேட்டை நீர் சேகரிப்பு கிணறுகளை புனரமைத்தல் பணிகள் ரூ.132.52 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் மற்றும் ரங்கநாதன்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த இரு கிணறுகள் மூலம் புதுப்பாளையத்தில் உள்ள தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரமாகும் தண்ணீர் 6 இடக்களில் உள்ள நீர் உந்து நிலையங்கள் மூலம் திண்டுக்கல் நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 636 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் இடைக்கால (2016) மக்கள் தொகை 7,13,575 பயனடைந்து வருகின்றனர். உச்சகட்ட கால(2031) மக்கள்தொகை 8,27,402 பயனடையவுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இடைக்கால குடிநீர் தேவை நாளொன்றுக்கு 32.40 மில்லியன் லிட்டர் என்ற அளவில் உள்ளது. மேலும் உச்சகட்டகால குடிநீர் தேவை நாளொன்றுக்கு 43.20 மில்லியன் லிட்டர் என்ற அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் தொடங்கி இடைக்கால ஆண்டு நெருங்கிவிட்டபடியால் திட்டத்தில் 68 இடங்களில் உள்ள அனைத்து மின் மோட்டார்களை நிர்ணயித்த காலத்திற்கான அளவு நீர் உந்தம் செய்ய மின் மோட்டார்ளின் உந்து திறனை மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தனர்.
தற்போது புனரமைப்பு திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் அச்சமாபுரம் மற்றும் திருமுக்கூடலூர் ஆகிய இடங்களில் ஒரு நீர் சேகரிப்பு கிணறு அமைத்து கூடுதலாக நாளொன்றுக்கு 23 மில்லியன் லிட்டர் நீர் உந்தம் செய்து, உச்சகட்ட கால அளவு தேவையை நிவர்த்தி செய்ய புதிய திட்ட மதிப்பீட்டில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.மாரியப்பன், உதவி நிர்வாக பொறியாளர் திரு.ச.சவடமுத்து, உதவி பொறியாளர் திரு.தி.கனகராஜன், துணை நிலநீர் வல்லுநர் திரு.ச.விஜயபாஸ்கரன், உதவி நிலநீர் வல்லுநர் திரு.ச.இளங்கோவன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.