Close

Dindigul District Monitoring Officer Inspection

Publish Date : 21/09/2022
.

செ.வெ.எண்:-61/2022

நாள்:20.09.2022

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகளை அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத்ராம் சர்மா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளை திண்டுக்கல் மாவட்டத்திற்கான அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத்ராம் சர்மா இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பொன்னிமாந்துறை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்-2020-2021-ன் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.32.66 லட்சம் மதிப்பீட்டில் 12,000 மரக்கன்றுகள் நட்டு அடர்குறுங்காடு(மியாவாக்கி) உருவாக்கப்பட்டுள்ளதை அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள இந்திய இஸ்ரேல் கூட்டு முயற்சியினால் உருவான தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் வீரிய ஒட்டு காய்கறிகளான கத்திரி, மிளகாய், தக்காளி, குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யும் இயந்திரம், உயர் ரக பசுமைக்குடில் மூலம் வளக்கப்பட்டு வரும் காய்கறி குழித்தட்டு நாற்றுகள், உரம் மற்றும் நீர்ப்பாசன அமைப்பு கொண்ட தானியங்கி இயந்திரம், பூச்சி புகா நிழல் வலைக்குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காலிபிளவர் போன்ற உயர் தொழில் நுட்பங்களை பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பண்ணை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்த மையத்தில் பயிலும் முதலாம் ஆண்டு பட்டயப்படிப்பு தோட்டக்கலை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, கணக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் “எண்ணும் எழுத்தும் திட்டம்” செயல்பாடுகளை, அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள், ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 01.03.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லுாரிக் கனவு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறித்தும், அதன்மூலம் பயனடைந்தது குறித்தும் பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம், அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்து வரும் பழனி தொப்பன்செட்டியார் தெருவில் உள்ள பயனாளியை நேரில் சந்தித்து, சிகிச்சை முறைகள், மருந்துகள் வழங்கப்படும் முறைகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். பின்னர் வீடு தேடி மருந்துகள் வழங்கும் மருத்துவப் பணியாளர்களிடம் குறித்த நாட்களில் மருந்துகளை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ரவிபாரதி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், தோட்டக்கலை உதவி இயக்குநர் திரு.சே.அலெக்ஸ் ஐசக், தோட்டக்கலை அலுவலர் செல்வி. பவானி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அனிதா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஸ்வரி, மருத்துவ அலுவலர் மரு.பிரீத்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.