Close

Dindigul District Monitoring Special Officer Meeting

Publish Date : 10/11/2021
.

.

செ.வெ.எண்:-20/2021

நாள்:-10.11.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் – திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.11.2021) நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பொழிவு சராசரியை காட்டிலும், 25 சதவீகிதத்திற்கு மேல் கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு மழை பொழிவு நல்ல முறையில் இருக்கின்ற காரணத்தினால், மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும்,

56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மேற்படி இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் 114 கி.மீ, பேரூராட்சி பகுதிகளில் 395.66 கி.மீ, ஊராட்சி பகுதிகளில் 8650.03 கி.மீ, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் 49 கி.மீ, பழனி நகராட்சி பகுதிகளில் 61.83 கி.மீ, கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் 62 கி.மீ என திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 9332.52 கி.மீ கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1217 நபர்கள் முதல் தகவல் அளிப்பவர்களும், 427 நபர்கள் கால்நடை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், 12 நபர்கள் பாம்பு பிடிப்பதற்கான பயிற்சியும், 373 நபர்கள் நீச்சல் பயிற்சி பெற்றவர்களும் 613 நபர்கள் மழை காலங்களில் சாய்ந்து விழும் மரங்களை வெட்டும் பணிகளை மேற்கொள்ள பயற்சி அளிக்கப்பட்:டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பெருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.

மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும். வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டால் பயிர் வகைகள் கணக்கீடு செய்யப்பட்டு உரிய இழப்பீடுகள் வழங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைத்துறையிர் கிராமப்புறசாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைகாலங்களில் மரங்கள் விழுந்தால் அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மின்சாரவாரியம் அலுவலாகள், வடகிழக்கு பருவமழைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் துறைகளின் மூலம் மழை நீர் செல்லும் வழிதடங்களில் உள்ள ஓடைகள், கால்வாய்கள், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. குளம், கண்மாயிகள், நீர்வரத்து வெளியேற்றம் உள்ளிட்டவைகளை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பேரிடர் ஏற்படும் பட்சத்தில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்களை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களை உரிய முறையில், பாதுகாப்பாக மீட்டு, தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான முறையான திட்டமிடல்களை தயார் செய்து, அதன்படி விரைவாக செயல்படுவது மிகவும் இன்றியமையாததாகும். தற்போதைய சூழ்நிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள் பேரிடர் மேலாண்மையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் இடிமின்னலுடன் கூடிய கனமழையின்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நீர்நிலைப்பகுதிகளில் வேடிக்கை பார்க்கும் செயல்களிலும், நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்க்குமாறும், ஆழமான பகுதி என்ற எச்சரிக்கை பலகையினை நீர்நிலைகளின் கரைகளில் வைத்திடவும், தொடர் மழைக்காலங்களில் மண்சுவருடன் கூடிய குடிசை வீடுகள், இடியும் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், போன்றவற்றை உடனடியாக, சரிசெய்திடவும், வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா 0451-1077 என்ற தொலைபேசி எண்ணிற்கும் 75988-66000 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்குமாறும், பருவமழைக்காலங்களல் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்படும் போது பொதுமக்களை மீட்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள நீச்சல் வீரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள், நாரிழை படகுகள் மற்றும் பரிசல்கள், மீட்கக் கூடிய உபகரணங்கள், பொதுமக்களை மீட்க மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், காலி சாக்கு பைகள், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள், மின் கம்பங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

நீர் நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும், பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தூர்வாரபட்டு, வெள்ளத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிசெய்திட வேண்டும். மேலும், மழைக்காலங்களில் பெறப்படும் நீரினை விணாக்கமல் முறையாக சேமித்திடவும், உள்ளாட்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரினை குளோரினேற்றம் செய்யப்பட்டு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்றிட வேண்டுமென திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி ரா.மனோரஞ்சிதம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜன், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு.விஜயக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.எஸ்.அன்புச்செல்வன், துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.மு.வரதராஜன் (திண்டுக்கல்), மரு.வி.யசோதாமணி (பழனி), திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.