Close

Dindigul – People’s Movement for Clean Cities

Publish Date : 06/06/2022
.

செ.வெ.எண்:-13/2022

நாள்:03.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness Drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று(03.06.2022) திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி, நகர பசுமை, தூய்மைக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி, விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், துணை மேயர் திரு.ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு பசுமை இயக்கத் திட்டத்தில் திண்டுக்கல் மாநகரை பசுமை நகரமாக மாற்றும் வகையில் மரக்கன்று நடும் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, விழிப்புணர்வு ஸ்கேட்டிங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் (பொ) திரு.முருகேசன், மாநகர்நல அலுவலர் மரு.இந்திரா, மண்டல குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுசுகாதாரப்பிரிவு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.