Dindigul Tholil valam

செ.வெ.எண்:-67/2025
நாள்:19.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் “திண்டி தொழில் வளம்“ தொழில் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் தலைமையில் ”திண்டி தொழில் வளம்“ என்கிற தலைப்பில் தொழில் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் இன்று(19.06.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைர் அவர்கள் பேசியதாவது:-
நாட்டின் வளர்ச்சியிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வளர்ச்சியின் நோக்கம் மற்றும் வளர்ச்சியின் விளைவுகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறக்கூடியதாக இருந்தால்தான் வளர்ச்சி என்பதை அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர். கள்ளக்குறிச்சி. விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி. திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருக்கிறது. இங்கு 9,500-க்கும் மேற்பட்ட பெரிய, சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. சுமார் 1,50,000 நபர்கள் தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகின்றனர். விவசாயம் ஒரு முக்கியமான தேவை. அதற்கு அடுத்தக் கட்டமாக தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு பெறுகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முதல்நிலையை பெறுகிறது. அதற்கு அடுத்தப்படியாக தொழில் நிறுவனங்கள் இரண்டாம் நிலையை பெறுகிறது. மாவட்டம் வளர்ச்சி அடைய அந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிறுவனங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அதிகப்படியான விவசாய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டமாக திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயம் சார்ந்த பொருட்களை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு பொருளாதார நிலை உயர ஒரு வாய்ப்பாக உள்ளது.
பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொழில் வல்லுநர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று என்ன வசதிகள் உள்ளது என்று அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து செயல்முறை விளக்கம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழில் சார்ந்த துறையினையும் ஒருங்கிணைத்து “திண்டி தொழில் வளம்“ என்ற அமைப்பு உன்னதமான ஒரு நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கான வசதிகள், வாய்ப்புகள் நாம் இருக்கக்கூடிய இடத்திற்கே கொண்ட சேர்த்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில் போன்ற பொதுமக்கள் சார்ந்த நல திட்டங்களை இல்லத்திற்கே கொண்டு போய் சேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அதேபோல் தொழில் நிறுவனங்களுக்கும் அவர்கள் இருக்கக்கூடிய இடத்திற்கே தொழில் வளர்ச்சியில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றது என்று தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.
நாம் அனைவரும் சேர்ந்து கரம் சேர்ப்போம் கட்டமைப்போம் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு திண்டி தொழில் வளம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இதனுடைய பயன்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏற்கனவே இருக்கக்கூடிய தொழில் முனைவேர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் ஆகியோர் தொழில் முனைவோர் திட்டங்கள் மூலமாகவே, அரசு வழங்கக்கூடிய மானியம் மூலம் சுமார் 2000 தொழில் முனைவோர் உருவாகவும், வளர்ச்சி அடைவதற்கும் அரசு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் ஏற்படுத்தி தரப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் இத்திட்டங்களின் பயன்பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை தொடர்புகொண்டு பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நபார்டு உதவிப் பொதுமேலாளர் திரு.ஹரீஸ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆனந்த் பிரபாகர், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், துணை இயக்குநர்(DISH) திரு.பிரேம்குமார், தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டி ஆலோசகர்கள் திரு.சார்லஸ் ராஜ்குமார், திரு.ஜோதிநாராயணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(TIIC) கிளை மேலாளர் திரு.கண்ணன், சிட்கோ மேலாளர் திரு.பிரான்சிஸ், சிப்காட் திட்ட அலுவலர் திரு.கண்ணன், தொழில் முனைவோர்கள், அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.