Close

Dindigul Tholil valam

Publish Date : 13/06/2025

செ.வெ.எண்:-34/2025

நாள்:12.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் “திண்டி தொழில் வளம்“ தொழில் பட்டறை திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் 19.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ”திண்டி தொழில் வளம்“ என்கிற தலைப்பில் தொழில் பட்டறை திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் 19.06.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த தொழில் பட்டறையில், தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வழிகாட்டி வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

புதிய மற்றும் விரிவாக்க திட்டங்கள் துவங்குவதில் உள்ள இடர்பாடுகளை களைதல் தொடர்பாக ஒற்றைச் சாளர தீர்வுக் குழுவின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து ஒற்றைச் சாளர தீர்வுக்குழு கூட்ட உறுப்பினர்கள் விளக்கவுள்ளனர். தொழில் நிறுவனங்கள் தொடங்க தேவையான வரைபட ஒப்புதல், சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவது தொடர்பான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளன. அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கணினி விளக்கப்பட காட்சி மூலம் திட்டங்கள் குறித்து விளக்கப்படவுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கப்படவுள்ளது. மேலும் தொழில் திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள், தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் ”திண்டி தொழில் வளம்“ தொழில் பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.