Disabled Persons Special Camp

Publish Date : 12/07/2019
1

2

செ.வெ.எண்:-37/2019 நாள்:-11.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, ரூ.1.12 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்:-

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் இன்று (11.07.2019) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளின் மீது தனிகவனம் செலுத்தி, இலவச செயற்கை கை, செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல்கள், காதொலி கருவிகள், சக்கர நாற்காலி, பிரெய்ல் கிட், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உபகரணங்கள், ரொலேட்டார் ஆகிய உபகரணங்கள் அளவீடு மற்றும் மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாகவும் மற்றும் தனியார் பங்களிப்புடனும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளை பயன்பெறச் செய்து வருகிறது.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கென குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினம், திண்டுக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலஅலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 128 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியுடைய மனுக்கள்மீது உடன் தீர்வு காணும் வகையில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51 ஆயிரம்; மதிப்பிலான அதிநவீன செயற்கை

கால்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.39 ஆயிரம்; மதிப்பிலான நவீன செயற்கை கை மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்குக் குச்சி, பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி கைக்கடிகாரம் மற்றும் கருப்புக்கண்ணாடி, 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,500; மதிப்பீட்டில் மூளை முடக்கு வாத சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.1.12 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் சிறப்பு முகாம்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொண்டும், பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் மூலமாகவும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்தார்.

இச்சிறப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு.ச.சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன், பல்வேறுத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.