Disaster Fire Services and Rescue Operations

செ.வெ.எண்:-03/2025
நாள்:-02.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.06.2025) நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், இயற்கை இடர்பாடுகளான நிலநடுக்கம், புயல், மழை, வெள்ளம், தீ போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது, இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்கள் மீட்கும் பணிகள், கால்நடைகளை ஆபத்தான பகுதிகளிலிருந்து மீட்கும் பணிகள், வீடுகளில் எரிவாயு இணைப்பில், தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு அணைப்பது, பட்டாசு வெடி விபத்து ஏற்படும்போது எவ்வாறு காப்பாற்றுவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பல்வேறு நவீன சாதனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏற்படும்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பல்வேறு நவீன சாதனங்களை பயன்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வெள்ளப்பெருக்கு போன்ற இடர்பாடுகள் ஏற்படும்போது, கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் விரைந்து சென்று நவீன சாதனங்களை பயன்படுத்தி மீட்பு பணிகள் மேற்கொள்வர்.
அதேபோல் நிலநடுக்கம் ஏற்படும்போது, பொதுமக்கள் வீட்டிற்கு வெளியில் இருந்தால் செங்கல், சுவர் பூச்சு, தொங்கும் விளம்பர பலகைகள், பாலங்கள், தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் மற்றும் பிற கட்டட இடிபாடுகளுக்கு அருகில் நிற்காமல் அங்கிருந்து விலகி வெட்டவெளிக்கு செல்ல வேண்டும். பாதுகாப்பாக கட்டப்பட்ட கட்டடம் அருகில் இருந்தால் அங்கேயே இருந்து, நிலநடுக்கம் அசைவின்போது, கட்டடத்தை விட்டு வெளியேற வேண்டாம்.
ஆறு, ஓடை, வாய்க்கால், குளம் போன்ற நீர்நிலைகளில் கனமழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் குடம், காய்ந்த மரக்கட்டுமரம், தண்ணீர் கேன் போன்ற மிதக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் பயணித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியும். எனவே தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மு.கோட்டைக்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.