District AD Welfare Office – Higher Education Guidance Camp

செ.வெ.எண்:-40/2023
நாள்:-26.04.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.04.2023) நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக அரசு, மாணவ, மாணவிகள் உயர்கல்வி சிறப்பாக பயில வேண்டும் எனும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் உயர்கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்த பல்வேறு முகாம்கள் உங்களுக்கு நடத்தப்படுகிறது. நாங்கள் மாணவர்களாக இருந்தபோது இதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் எதுவும் இல்லை. நீங்கள் உயர்கல்வியில் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட என்ன பாடங்களை படிக்க வேண்டும், அதன் மூலம் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன, எதிர்கால திட்டம் குறித்த வழிமுறைகளை இதுபோன்ற முகாம்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் நீங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கடினமாக உழைத்து சிறப்பாக கல்வி பயின்றால் 50 ஆண்டுகளுக்கு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும். அரசு பணி என்பது நிரந்தரமாக சம்பளம் வரும் பணியாகும் நீங்கள் மருத்துவராகவோ அல்லது வழக்கறிஞராகவோ இருந்தால் அதிக வயதிலும் பணியாற்றி விடலாம். கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த நான்கு ஆண்டுகளை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை எனில் 50 ஆண்டுகளுக்கு கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். இம் முகாமில் சிறப்பாக பங்கு உண்டு, இங்கு உங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பயன்படுத்தி நீங்கள் சிறப்பான நிலையை அடைய வேண்டும்.
உங்கள் ஒவ்வொருவரின் பெற்றோர்களும் உங்களை மிகுந்த சிரமப்பட்டு கல்வி கற்க வைக்கின்றனர். அதனை உணர்ந்து நீங்கள் சிறப்பாக படிக்க வேண்டும் தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு வெற்றியை எளிதாக கொடுக்கும். அனைவரும் சிறப்பான முறையில் உயர்கல்வி பெற்று வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
இந்த முகாமில், 250க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் திரு.க.அருணாச்சலம், தனி வட்டாட்சியர்(ஆதிதிராவிடர் நலம்) முனைவர் இரா.அங்களபாண்டியன், ஆலோசகர்கள் திரு.செல்ல.உதயாதித்தன், திரு.சுனில்குமார், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.