Close

District child protection-JJB member

Publish Date : 26/11/2021

செ.வெ.எண்:-71/2021

நாள்:26.11.2021

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள, இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இரு முறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை, “மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), SPR நகர், கலெக்ட்ரேட் (அஞ்சல்), திண்டுக்கல்-624004” என்ற முகவரியில் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு, அதற்கான அமைந்த படிவத்தில் 15 நாட்களுக்குள் “மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), ளுPசு நகர், கலெக்ட்ரேட் (அஞ்சல்), திண்டுக்கல் – 624004.” என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.