District Collector Inspection – Bala Thirupathi School

செ.வெ.எண்:-45/2023
நாள்: 18.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பாலதிருப்பதி தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பாலதிருப்பதி தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.11.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெ தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியினை தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன், பாதுகாப்பான முறையில் கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக அனைத்து பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உத்திரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் அனைத்து பள்ளிகளையும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பாலதிருப்பதியில் இயங்கும் துவக்கப்பள்ளி 1973-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அன்று முதல் இப்பகுதியில் இயங்கி வருகிறது. 2004ஆம் ஆண்டிற்கு பின் தற்போதைய இடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. பால திருப்பதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 32 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள், 2 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். 2004 ஆம் ஆண்டில் இருந்த மக்கள் தொகை, சாலை வசதி, போக்குவரத்து, வாகன நெருக்கடி போன்றவற்றை கணக்கீட்டு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ள வாகன போக்குவரத்தின்படி மாணவ, மாணவியர், பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்வது பள்ளிக்கு தனியாக வந்து செல்வது பாதுகாப்பானதாக அமையாது என்பதால் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மாற்று இடத்தில் பாதுகாப்பான முறையில், கான்கிரீட் கட்டிம் மற்றும் அனைத்து வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு பள்ளியில் கல்வி கற்பிக்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலதிருப்பதி மாநகராட்சி துவக்க பள்ளி இயங்கும் பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சியின் நிதியின் மூலம் புதியதாக கட்டிடம் கட்டி தரப்படும். மேலும், இப்பள்ளியின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.என்.இரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.