Close

DPO-JAL SAKTHI ABIYAN

Publish Date : 08/08/2019

செ.வெ.எண்:16/2019 நாள்:06.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நீர் சேமிப்பு முக்கியத்துவம் குறித்து நீர் மேலாண்மை இயக்கம் என ஒரு இயக்கமாக அறிவித்து (JAL SAKTHI ABIYAN) பொதுமக்கள் பங்கேற்புடன் மழைநீர் சேகரிப்பினை மேற்கொள்ளவும் அதன்படி, 01.07.2019 முதல் நீர்மேலாண்மை இயக்கத்தின் குறிக்கோள்கள் முழுமை அடையும் வகையில் செயல்படுத்த திண்டுக்கல் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி. கல்லூரிகள் புதிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை புனரமைத்தல் ஆகிய பணிகளை 100 சதவீதம் முடிக்க 07.08.2019 முதல் 13.08.2019 வரை ‘மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கும் வாரம்” செயல்படுத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு எதிர்வரும் 15.08.2019 சுதந்திர தினத்தன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட பாராட்டுச் சான்றிதழை பெறுவதற்கு கட்டிட உரிமையாளர்கள் தங்கள் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு தெளிவாக தெரியும் வண்ணம் அதன் அருகில் நின்று புகைப்படத்துடன் வீட்டு முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் கீழ்கண்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை சரிபார்க்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு தகுதியான வீட்டு உரிமையாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

வீட்டு உரிமையாளர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:-

மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள்

பேரூராட்சிப்பகுதிக்கு சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள்.

ஊராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சி) மற்றும் (வட்டார ஊராட்சி)

எனவே, பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.