DRDA-MGNREGS-Disabled Person-Job Card Issue
செ.வெ.எண்:-04/2023
நாள்:-01.03.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(01.03.2023) முதல் 10.03.2023-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இத்துறையின் அரசாணை (நிலை) எண்.52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி-1) துறை, நாள்:25.06.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இத்திட்ட வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாளது தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 4,707 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களின் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(01.03.2023) முதல் 10.03.2023-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் வேலை அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற அட்டையினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.