Close

DRDA – Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations in 21 days-RECORDS

Publish Date : 01/12/2021
.

.

.

செ.வெ.எண்:-82/2021

நாள்:-30.11.2021

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கம் – எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, கட்டிட மேற்கூரைகளில் விழும் மழை நீரினை தேக்கி வைத்து உபயோகிக்க, திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA District Rural Development Agency)யின் கீழ், மாவட்ட முழுவதும் 611 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் (Roof – Top Rain Water Harvesting Structures) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மகத்தான உலக சாதனை முயற்சி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அரா.சக்கரபாணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 10-11-2021 அன்று துவக்கி வைத்தார்கள்.

இப்பணிகள் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் கண்காணிப்பில், மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021-ஆம் தேதிக்குள் 611 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த “21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கும்” (Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations in 21 days) சாதனையானது, திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்; நிகழ்வாகும். உலக வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்த்தப்படும் மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு ஆகும்.

இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த சாதனை நிகழ்வினை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களைச் சார்ந்த 11 ஆய்வாளர்கள் 300க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அனைத்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் கட்டிட மேற்கூரைகளின் அளவினைப் பொறுத்து 9000 லிட்டர் முதல் 18,000 லிட்டர் வரை மழைநீர் தேக்கும் விதமாக அமைக்கப்பட்டது. தேக்கிய மழைநீரினை உடனடியாகப் பயன்படுத்தும் விதத்தில் மோட்டார் பொருத்தி மேல்நிலைத் தொட்டிக்கு கொண்டு சென்று பள்ளிகளின் கழிவறைகளில் உபயோகம் செய்யப்பட்டது.

திட்டம் தொடங்கிய 2ஆம் வாரத்திலேயே மழையினால் ஏறக்குறைய அனைத்து மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் 100 சதவீதம் நிறைந்து ஒவ்வொரு தொட்டியும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. அதிக மழையினால் வெளியேறும் நீரையும் நிலத்தில் உள்ள கிணறு, போர்வெல், மழைநீர் வடிகால் தொட்டிகளில் சேரும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுக்கவும் 2 கோடி லிட்டருக்கும் அதிகமாக மழைநீர் தேக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. வீணாக ஆவியாகும் மழைநீரினை தேக்கி வைத்து தண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் மாறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக மழைப்பொழிவு 1,000 மி.மீ ஆகும். ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மில்லி மீட்டர் மழை பொழியும் பொழுது ஒரு லிட்டர் மழைநீரை சேமிக்கலாம். அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள 611 இடங்களில் உள்ள 1,115 கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 1,03,033.63 சதுர மீட்டர் ஆகும். எனவே, இம்முயற்சியினால் மட்டும் ஒரு வருடத்திற்கு சுமார் 10.3033 கோடி லிட்டர் மழை நீரை சேமிக்க முடிகிறது. இது ஒரு சராசரி அணையின் நீர் சேமிப்பிற்கு இணையான ஒன்றாகும்.

இந்த நிகழ்விற்கான உலக சாதனை சான்றளிக்கும் விழா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(30.11.2021) நடைபெற்றது. விழாவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC) உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜீடிகேட்டர் திரு.அமீத் கே.ஹிங்க்ரோனி அவர்களும், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அம்பாஸ்டர் மற்றும் சீனியர் அட்ஜீடிகேட்டர் மருத்துவர் திரு.ஏ.கே.செந்தில்குமார் மற்றும் அட்ஜீடிகேட்டர் முனைவர் திரு.ஆ.சாந்தாராம் அவர்களும், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் மற்றும் மூத்த சாதனைப் பதிவு மேலாளர் திரு.பி. ஜெகன்நாதன் மற்றும் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் திரு.கே.எஸ்.கார்த்திக் கனகராஜ் அவர்களும், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பதிவு மேலாளர் முனைவர் திரு.பி.பாலசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு உலக சாதனை சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோரிடம் வழங்கி கௌரவித்தார்கள். சாதனை நிகழ்;வில் கலந்துகொண்ட அனைவரையும் வாழ்த்தினார்கள். இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத புதிய உலக சாதனையைப் படைத்துள்ளீர்கள் என்று பாராட்டினார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த “21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்க்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கிய உலக சாதனை” (Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations in 21 days) நிகழ்வு திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்த நிகழ்வாகும். உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு என உலக சாதனை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன்,இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட அலுவலர் திருமதி எஸ்.பொன்னம்மாள், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.