Close

DRDA – Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations

Publish Date : 22/11/2021
.

..

செ.வெ.எண்:-50/2021

நாள்:-19.11.2021

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தில் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் “புதிய உலக சாதனை” 21 நாட்களில் 600 எண்ணிக்கையில் சேமிப்பு தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்கள். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, கட்டிட மேற்கூரைகளில் விழும் மழை நீரினை தேக்கி வைத்து உபயோகிக்க, திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA District Rural Development Agency)யின் கீழ், மாவட்ட முழுவதும் 600 மழைநீர் சேகரிக்கும் கட்டமைப்புகள் (Roof – Top Rain Water Harvesting Structures) அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் முயற்சியானது உலகிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, இந்த நிகழ்வினை “21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்குதல்” என்னும் மாபெரும் உலக சாதனையாக மாற்றவுள்ளோம். இந்த மகத்தான உலக சாதனை முயற்சியை, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு இரா.சக்கரபாணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 10-11-2021 அன்று துவங்கப்பட்டது.

இப்பணிகள் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் கண்காணிப்பில், மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 445 கிராமங்களின் அரசாங்கக் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகளில் 21 நாட்களில் அதாவது, 30.11.2021-ஆம் தேதிக்குள் 600 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் உருவாக்கப்படவுள்ளது.

உலக சாதனை விதிகளின்படி குறைந்தது 9,000 லிட்டர் மழைநீர் தேக்கும் விதமாக ஒவ்வொரு தொட்டியும் கட்டமைக்க வேண்டும். தேக்கிய பின் அதிகளவில் வெளியேறும் மழைநீரை நிலத்தில் உள்ள கிணறு, போர்வெல், மழைநீர் வடிகால் தொட்டிகளில் சேரும் விதமாக கட்டமைக்க வேண்டும் என பல்வேறு விதிகளை பின்பற்றி நடைமுறைப் படுத்தவுள்ளோம். குறைந்தது 2 கோடி லிட்டர் மழைநீர் தேக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் வீணாகும் மழை நீரினை இவ்வாறு தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் மாறிவிடும்.

இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்தப் புதிய முயற்சியை, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA – LLC), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த “21 நாட்களில் பல்வேறு இடங்களில் கட்டிட மேற்கூரை மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்குதல்” (Most Roof – Top Rain Water Harvesting Structures Constructed at Multiple Locations in 21 days) சாதனை முயற்சி திண்டுக்கல் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். உலக வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்த்தப்படும் மாபெரும் மக்கள் சேவை நிகழ்வு ஆகும்.

நாம் வாழ்கின்ற பூமித்தாய்க்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனித குலம் ஒன்றி வாழ வீணாகும் மழை நீரினை 100 சதவீதம் நமக்கு தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற விழிப்புணர்விற்காகவும், தமிழ்நாடு அரசின் உறுதுணையோடு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.