Education Department – Scholarship Meeting

செ.வெ.எண்:-40/2023
நாள்:-20.03.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போஸ்ட்/ பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு போஸ்ட்/பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை விரைந்து வழங்குவதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.03.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகைகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கிட தகுதி பெற்றுள்ள 10,079 மாணவ, மாணவிகளில் இதுவரை 28 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே அஞ்சலக கணக்குகள் துவக்கப்பட்டு ஆதார் விவரங்கள் மற்றும் தொலைபேசி விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மற்றும் அஞ்சலக அலுவலர்களும் இணைந்து 100 சதவீதம் அனைவரையும் இணைக்க வேண்டும். காலதாமதம் இன்றி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை சென்று சேரும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களின் மூலம் சலுகைகள் உள்ளது. இவைகளை பெற அவர்களுக்கு சாதி சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பட்டதாரி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதை விரைவுப்படுத்த வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் சுமார் 10 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து தொடர்ந்து வரும் தேர்வுகளில் அவர்களை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு அரசின் திட்டங்கள் சலுகைகள் கொண்டு சேர்க்கும் பணிகளையும், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளையும், பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைந்து செய்திட வேண்டும் என பேசினார்
இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், மாவட்ட கல்வியாளர் திரு ராகவன் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.