Education meeting-DLMC

செ.வெ.எண்:-75/2025
நாள்:-24.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான கல்வி ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு, தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான கல்வி ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கட்டடப் பணிகள், நபார்டு தி்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, சுகாதாரத்துறை, மாணவர் வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு தொடங்கப்பட்ட விபரம், மாணவ, மாணவிகளுக்கான ஆதார் தொடர்பான பணிகள், பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றலுக்கான வாய்ப்புள்ள குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆதார் தொடர்பான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கிட வேண்டும்.
இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, இடைநிற்றலுக்கான காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து அவர்களை பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா அல்லது இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள் எவரும் இல்லை எனும் நிலையை எட்டும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் உடல் நலத்தில் அக்கறை செலுத்திட தேவையான ஆலோசனைகள் வழங்கிட வேண்டும். மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்திடும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி 100 சதவீதம் தேர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும். மேலும் அவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் தகுந்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கும் வகையில் இரண்டாம் கட்டமாக 20,000 கற்போர்களை கண்டறிந்து, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வழங்க திட்டமிடப்பட்டு, அனைத்து வட்டார வளமையங்களிலும் 19.02.2025 நிலவரப்படி 20,000 கற்போர் கண்டறியப்பட்டு 1153 மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி உஷா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.