Close

Election announcement

Publish Date : 09/12/2019

செ.வெ.எண்:-04/2019 நாள்:-09.12.2019
திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019-ஐ முன்னிட்டு வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2019 வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் 09.12.2019 முதல் துவங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று காலை 8.00 மணிக்கு தொடங்கும்.

இத்தேர்தலை முன்னிட்டு 09.12.2019 அன்று தொடங்கி 16.12.2019 வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். பெறப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17.12.2019 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை 19.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குப்பட்ட 23 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கும், 232 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும், 306 கிராம ஊராட்சி தலைவர்களுக்கும், 2,772 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் 11.01.2020 அன்று நடைபெறும்.

முதல்கட்டமாக 27.12.2019 அன்று திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 125 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 144 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1,401 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் 3,35,642 ஆண் வாக்காளர்களும், 3,49,317 பெண் வாக்காளர்களும், 68 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 6,85,027 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 93 மண்டலங்களில் 617 மையங்களில் 1160 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம்கட்டமாக 30.12.2019 அன்று பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடச்சந்தூர், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும், 107 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 162 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 1,371 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் 2,58,384 ஆண் வாக்காளர்களும், 2,65,868 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,24,280 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 90 மண்டலங்களில் 631 மையங்களில் 996 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 183 மண்டலங்களில் 1,248 வாக்குப்பதிவு மையங்களில் 2,156 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 12,09,307 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இத்தேர்தலுக்காக 31 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 429 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 6,979 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு படிவம் 2ஏ, கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு படிவம் 2பி பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது வேட்புமனுவுடன் கட்சியின் சார்பில் படிவம் சி-யினை இணைத்திட வேண்டும்.

கிராம ஊராட்சி உறுப்பினருக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.200-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100-ம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.600-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.300-ம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.1000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.500-ம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். வைப்புத்தொகையினை ரொக்கமாகவோ அல்லது ஊராட்சி ஒன்றிய செலுத்துச் சீட்டின் மூலமாகவோ வழங்கலாம்.

வேட்புமனுக்கள், வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழியும் நபரால் மட்டுமே பூர்த்தி செய்திட வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை(ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) வேட்புமனுக்கள் பெறப்படும். பெறப்படும் வேட்புமனுக்களுக்கு தொடர் எண் வழங்கப்படும். காலதாமதமாகவோ அல்லது உரிய நேரத்திற்கு முன்னதாகவோ வழங்கப்படும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஒரு வேட்பாளர் ஒரு பதவிக்கு 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். முன்மொழிபவரின் பெயர், வேட்பாளர் எந்த வார்டில் போட்டியிடுகிறாரோ அந்த வார்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.