Close

Election -Block Observer Training

Publish Date : 01/02/2022
.

செ.வெ.எண்:-51/2022

நாள்:-31.01.2022

வட்டார பார்வையாளர்களின் பணி, கடமைகள் மற்றும் பொறுப்புகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்-2022 நடத்தப்படவுள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுடன் இன்று(31.01.2022) ஆலோசனை மேற்கொண்டார்கள். ஆலோசனைக் கூட்டத்தில், வட்டார பார்வையாளர்களின் பணி, கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் விளக்கி, தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் துணை இயக்குநர்/உதவி இயக்குநர் பதவி நிலையில் 30 வட்டார பார்வையாளர்கள் நியமனம் (Book Observer) செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் அலுவர்கள் / உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / மண்டல அலுவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

சட்டமுறை படிவங்கள்/சட்டமுறை படிவங்கள் /கையேடுகள் / உறைகள் / மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்கள் மற்றும் உள்ளூர் ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்கள் ஆகியன போதுமான அளவு இருப்பு உள்ளதை ஆய்வு செய்தல் வேண்டும்.

தேர்தல் அறிவிப்பு நாளில் அறிவிப்பாணை படிவம்-2 அனைத்து கலங்களும் விடுதலின்றி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் மற்றும் இட ஒதுக்கீடு அரசிதழின்படி இடஒதுக்கீடு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

வேட்பு மனு தாக்கல்/வேட்பு மனு பரிசீலனை/ இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்தல் பணிகளை கண்காணித்தல் வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் மற்றும் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அச்சிடுதல் பணிகளை கண்காணித்தல் வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல், பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்தல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

தேர்தல் முகவர்கள் முறையாக நியமனம் செய்வதை கண்காணித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், வேட்பாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை புரிந்துள்ளதை உறுதி செய்தல் மற்றும் மண்டல அலுவலர்கள் வழியாக வாக்குப்பதிவு பொருட்கள் முழுமையாக சென்றடைந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

வாக்குப்பதிவு நாளன்று மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள கால இடைவெளியில் வாக்குப்பதிவு புள்ளி விவரம் அறிக்கை அனுப்புதல் வேண்டும்.

வாக்குப்பதிவு முடியுற்ற பின்னர். மண்டல குழுக்கள் வழியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணுகை மையம் வைப்பறையில் சீலிடுவதை உறுதி செய்தல் வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்தல் மற்றும் உரிய பதவி நிலையில் பற்றாளர்கள் நியமனம் செய்தல் வேண்டும். வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாக்கு எண்ணுகை குறித்த பயிற்சி வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

வாக்கு எண்ணுகை முகவர்கள் நியமனம் செய்தல் வேண்டும். வாக்கு எண்ணுகை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

வாக்கு எண்ணுகை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். வாக்கு எண்ணுகை நாளன்று சுற்று வாரியாக, மேஜை வாரியாக வாக்குகள் சரியாக எண்ணாப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். வாக்கு எண்ணுகை நாளன்று தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதை உறுதி செய்தல் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்குவதை கண்காணித்தல் வேண்டுமு.

தேர்தல் அறிவிப்பு வெளியீடு செய்ததில் இருந்து தேர்தல் பணிகள் முடியும் வரையில் மாநில தேர்தல் ஆணைய கையேடு எண்.5-ல் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்தல் வேண்டும். தேர்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து வரப்பெறும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியீடு செய்வதில் இருந்து முடிவுகள் அறிவிக்கும் வரையில் உள்ள அனைத்து புள்ளிவிவரங்களையும் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் விடுதலின்றி பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

தேர்தலின் போது கோவிட்-19 தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் 100 சதவீதம் சரியாக கடைபிடிப்பதை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் மற்றும் வட்டார பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.