Election -Collector Inspection-Dindigul corporation

செ.வெ.எண்:-07/2022
நாள்:-04.02.2022
வேட்புமனுக்கல் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகள் கேமரா(சிசிடிவி) மூலம் கண்காணிக்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் வேட்புமனுக்கள் பெறுதல் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(04.02.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேட்புமனுக்கல் தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்பு கேமரா(சிசிடிவி) மூலம் கண்காணிக்க 105 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளை கண்காணிக்க 30 வட்டார பார்வையாளர்கள் நியமனம் (Block Observer) செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க 30 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் 164, பெண்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் 164 மற்றும் பொது வாக்குச்சாவடி மையங்கள் 419 என மொத்தம் 747 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 5 வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிப்புக்கு(Critical) உட்பட்டவையாகவும், 149 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டம்(Vulnerable) நிறைந்தவைகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 3,000 வாக்குப்பதிவு கருவிகள்(Ballot Unit), 1,500 கட்டுப்பாட்டு கருவிகள்(Control Unit) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி, நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 486 வார்டுகளில் மொத்தம் 747 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிவதற்காக 3586 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியில்(14 மண்டலம்) மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 183 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 425 0752 மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.